புரியாப் புதிர் (உரைநடை வடிவம்)
மாறப்பன் ஒரு பெருஞ்செல்வந்தர். அவரின் பேச்சுக்கும் ஆணைக்கும் அந்த ஊரில் மறுபேச்சில்லை. ஊரே அவரின் பேச்சுக்கு பணிந்து நடக்கும். கனிவான நெஞ்சம் படைத்தாலும் கண்டிப்பிலும் அவரை மிஞ்ச ஆளில்லை. ஆசாரம், சாதியம், நாள் - கோள் பார்ப்பது என்பது அவரது பண்பாட்டில் ஊறிப்போன நெறிகள் என்பதை விட வெறிகள் என்றே சொல்லலாம். அவரின் அன்பு மகள் தான் கோதை. தாயில்லாமல் வளர்ந்த தளிர்க்கொடி.....! அழகின் இலக்கணத்தை இறை படைப்பில் ஒட்டு மொத்தமாய் பெற்று வந்த பேதை. உவமைகளால் பெண்ணை அழகாய் உருவேற்றும் பாவலர்களின் பார்வைக்கே கூட இதுவரை பட்டு விடாத பேரெழிலை வரமாய் பெற்ற பூமகள் !
காலம் கனிந்த போது, வழக்கம் போல் காதல் அவள் நெஞ்சில் கதைச் சொல்ல தொடங்கி விட்டது. அமுதன் ! அவன் தான் அவளது உள்ளத்தை அள்ளி விழுங்கிவிட்ட ஆணழகன். ஒப்பில்ல ஓவியக் கலைஞன் ......! பெற்றோர் இருவரை இழந்த சோகத்தில் வளர்ந்தாலும் ஓவியக் கலை வாத்தெடுத்த உண்மை கலை ஓவியன். வறுமை அவன் வாழ்க்கையை வாட்டி எடுத்தாலும் , கலை ஆளுமை அவனின் உள்ளத்தை ஊக்கி உருவாக்கியது.
யாருமே அறியா வண்ணம் காதலர் இருவரின் கனிந்த உள்ளம் காதலில் நாள்தோறும் நனைந்து நயம்பட வளர்ந்தது. மாலையும் இரவும் சந்திக்கும் வேளையைக் கோதையும் அமுதனும் குத்தகைக்கு எடுத்திருந்தனர்.
கோதை காலம் கழித்து மாலையில் திரும்புகின்ற வேளையில் எல்லாம் மாறப்பன் கோதையைக் கண்டிக்கத் தவறியதில்லை. ஆனாலும் காதல் நோயில் அவள் தவிக்கிறாள் என்கிற சந்தேகம் மட்டும் எள்முனை கூட அவருக்கு எழாமல் போனது மறைவான சந்திப்புகளில் இளங்குயில்களின் இனிய காதல் மறவாமல் தொடர்ந்தன.
அன்றொரு நாள் தன் ஊனிலும் உயிரிலும் கலந்து துடிக்கின்ற காவியத்தை ஓரிடத்தில் அமர வைத்து ஓவியமாய் வார்க்கத் தொடங்கியிருந்தான் அமுதன். முழு உருவை வரைந்து முடித்து கண்ணெழுதி முடிப்பதற்குள் பதபதைத்து ஓடி வந்தாள் கோதை. பதறி எழுந்தான் அமுதன். “ஏன் எழுந்தாய் அமுதே ?” என்றான். கோதை ஒரு திசையைக் காட்டினாள். ஆங்கே ஒருவன் உயிர் கொடுத்து ஓடிக் கொண்டிருந்தான். அப்பாவிற்கு வேண்டிய அன்பன் அவன். அது வரையில் யாருமறியாத நிலையில் நிகழ்ந்து வந்த அவர்தம் உறவு அன்று ஊரறிய உலா போனது.
களங்கமற்று தொடர்ந்த காதலர்தம் சந்திப்புக் காற்புள்ளியில் தொடங்கி முற்றுப்புள்ளியில் முடிந்து போனது. இங்கே அமுதன் .....! , அங்கே கோதை ...... ! காதல் உணர்வில் கொதித்துக் குழைந்து போனார்கள். முடிக்காத ஓவியத்தைப் பார்க்கின்ற வேளையில் வெடித்து நின்றான் அமுதன்.
அன்று அமுதனைத் தேடி மாறப்பனின் ஆட்கள் வந்தனர். அவனை அள்ளிக் காண்டு மாறப்பனிடம் கொண்டு சேர்த்தனர். தன் உள்ளக் கிடக்கை வடித்து நின்றான் அமுதன். அவனின் வாக்கைக் கேட்கும் நிலையிலோ அல்லது உள்வாங்கும் நிலையிலோ மாறப்பன் இல்லை. மாறாக, கோதையைவிட்டு ஓரடி அல்ல, வாழ்நாளெல்லாம் விலகி நிற்க வேண்டுகோள் விடுத்தார். ஏற்க முடியாதென்று முறுகி நின்றான் அமுதன். விடுவாரா ! பணமும் சாதியுமே எல்லாம் என்று பாதை வகுத்துவிட்ட மாறப்பன் நேர்வழிக்கா நிலை திரும்புவார்? “சுக்கு நூறாய் போய்விடுவாய் ...... ! என்று மிரட்டினார். உள்ளம் ஒடிந்து வெளியேறினான் அமுதன்.
அடுத்தடுத்து, வேதனைகள் ஆடைகட்டி ஆடத் தொடங்கின. தலைநகரில் பணிபுரியும் ஆசிரியருக்குக் கோதையை மணம் முடிக்க ஆயுத்தங்கள் ஆரம்பமாகின. தலைநகரில் பணிபுரியும் ஆசிரியர் கதிரவனுக்குக் கோதையை மணம் முடிக்க ஆயுத்தங்கள் ஆரம்பமாகின. இனி, மேலும் தாங்காது எனப் புயலெனப் ஆனாள் புள்ளிமான். ஒருநாள் நள்ளிரவில் தன் வீட்டுப் படிதாண்டிய கோதை, காதலன் தம் மடி தேடி வந்து நின்றாள். :வேறிடம் சென்று விரும்பியபடி வாழ்வோம், வாருங்கள்” என்ற கோதையின் கெஞ்சு மொழியில் தன் உள்ளம் கரைந்து உருகினான் அமுதன். வேறுவழியின்றி உடன் போக்கிற்கு உடன்பட்டான் சங்கத்தமிழ் கற்றறிந்த கலைமகன்.